சென்னை: இந்திய ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும், ரயில்களின் பாதையை மாற்றுவதற்கும் தனியார் தரப்பினரால் வசூலிக்கப்படும் ரயில் இன்ஜின் கட்டணத்தை அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு கடந்த 14-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையின்படி, இந்த ரயில் இன்ஜின் கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இது மணிநேர அடிப்படையில் கணக்கிடப்படும் கட்டணம். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டண உயர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்த கட்டணம் 2009-ல் உயர்த்தப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் அதிகரிக்கப்படுகிறது. ரயில் கட்டண உயர்வுக்கான காரணங்களை ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ரயில் இன்ஜினின் இயக்க செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் இந்த செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.