வாடகை ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல காஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இருந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி மற்றும் எச்பிசி நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிவாயுவை பாட்டில் மையங்களுக்கு கொண்டு செல்ல ஒப்பந்த அடிப்படையில் இந்த சங்கத்தில் உள்ள எரிவாயு டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்தம் 5,000 எரிவாயு டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தென்னிந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வேலை நிறுத்தம் தொடர்பாக தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சங்கம் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்களின் அறிவிப்பால் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.