சென்னை: தமிழகத்தில் ஜாதி பாகுபாடு தலைவிரித்தாடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகர் பவர் ஹவுஸ் அருகே உள்ள காமராஜ் காலனியில் தமிழக பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிவியல் நூற்றாண்டில் கூட ஸ்டாலின் அரசால் நல்ல குடிநீர் வழங்க முடியவில்லை. திமுக அரசு மக்களை கவனிக்காமல் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. கவர்னரை தபால்காரர் என்கிறார்கள். அப்படியானால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது ஏன்?

ராஜ்பவனை ஏன் மிதித்தார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு ஆளுநர் தேவை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது அது தேவையற்றதாகிவிடும். மாணவர்கள் கத்தியுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர். அறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் அறிவாளிகள் நடமாடுகிறார்கள். தமிழகத்தில் சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சியில் சமூக நீதி இல்லை. முதல்வர் ஸ்டாலின் மற்ற மாநில பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், தமிழகத்தில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பிரதமரின் இலங்கை பயணம் குறித்து வைகோ கட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ம.தி.மு.க சிறிய கட்சி. அந்த கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை அவர்களால் பார்க்க முடியாது. ஆனால் பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வருகிறார். முதலில், தங்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகளை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.