சென்னை தியாகராய நகரில் நடந்த பெரியாரின் தொண்டர் ஐயா ஆணைமுத்துவின் நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் கூறியதாவது, சமூக நீதி குறித்த வெறி எனக்குள் உள்ளது. அதற்குக் காரணம் என் தந்தை டாக்டர் ராமதாஸ். பெரியாரின் பாதையில் நடந்த ஐயா ஆணைமுத்து சமத்துவம் மற்றும் இடஒதுக்கீட்டிற்காக போராடியவர். அவருக்கு சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதனுடன், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். இது மாநில அரசின் உரிமை எனவும், மத்திய அரசின் உரிமை மட்டுமல்ல எனவும் கூறினார். கர்நாடகா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இப்படியான கணக்கெடுப்பை செய்து முடித்துள்ளன. ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் “அதிகாரம் இல்லையென” பொய் கூறுகிறார் என விமர்சித்தார்.
EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்யாத அரசு, வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தில் கைவிடச் செய்தது அரசின் தவறான வழக்காடல் காரணம் என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து முறை முதலமைச்சரை சந்தித்து இதற்காக வலியுறுத்தினோம் என்றும், ஆனால் அரசின் நடவடிக்கை இல்லாததால் தற்போது பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இது வன்னியர் பிரச்சனை அல்ல, சமூக நீதி தொடர்பான பிரச்சனை என்றும், தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகள் அடியோடு புறக்கணிக்கப்படுவதில் வேதனை தெரிவித்தார். இதற்கான போராட்டம் விரைவில் நடைபெறும் என்றும் கூறினார். திமுக பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாகவே பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் மாநில உரிமை பற்றி பேசினாலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு மட்டும் மத்திய அரசை முன்னிறுத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சமூகநீதி கிடைக்க வேண்டுமானால் கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.