டெல்லி: இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்பை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையானது 2022-23-ம் ஆண்டிற்கான தொழில்கள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உற்பத்தித் துறைக்கு பங்களிக்கும் பல்வேறு தொழில்களில் உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு மூலதன உருவாக்கம் போன்ற தகவல்கள் இதில் உள்ளன.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அடிப்படையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்தமுள்ள 2 லட்சத்து 53 ஆயிரம் தொழிற்சாலைகளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்து குஜராத்தில் 31 ஆயிரம் தொழிற்சாலைகளும், மகாராஷ்டிராவில் சுமார் 26 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திரா உள்ளன. தொழில் துறையில் வேலைவாய்ப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 85 லட்சம் வேலை வாய்ப்புகளில், 15 சதவீதம் அதாவது சுமார் 27 லட்சம் பேருக்கு தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் சுமார் 23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.