சென்னை: தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் உள்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோவை மலைப்பகுதி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 29) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (செப்டம்பர் 30) நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடநாட்டில் தலா 8 செ.மீ. புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் மற்றும் அன்னவாசலில் தலா 7 செ.மீ மழையும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்பாறு அணை, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம், தேனி மாவட்டம் மஞ்சலாறு, மதுரை மாவட்டம் எழும்பூர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நீலகிரி மாவட்டம் ஒட்டன்சத்திரம், அழகரை எஸ்டேட்டில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரிக் கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.