சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு தெலுங்கானாவில் நேற்று இரவு கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் நீடித்த வறண்ட வானிலை குறைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், நேற்று வட தமிழகத்தில் செங்கல்பட்டு, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், இன்று முதல் 6-ம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.