சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 1-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா 4 செ.மீ., நாலுமுக்கு தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்து, காக்கச்சி, தேனி மாவட்டம் பெரியாற்றில் தலா 2 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மற்றும் சிவகங்கையில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.