சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 22 முதல் 26 வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இடைவெளியில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.