சென்னை: சென்னையின் ஏப்ரல் மாத மின் தேவைக்காக தினமும் 3,910 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ஏப்ரலில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தினமும் 3,910 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் 12 மணி நேரத்துக்கு 2,610 மெகாவாட் மின்சாரமும், 6 மணி நேரம் கூடுதலாக 1,300 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும். கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தில், நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 1,300 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். இது இரவு நேரங்களில் அதிகரித்த தேவையை பூர்த்தி செய்யும். மீதமுள்ள 2,610 மெகாவாட் மின்சாரம் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை தேவைப்படும் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும்.
ஏப்., 10-க்கு பின், மின் தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மழை அளவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு மே மாதம் பெய்த மழையை கருத்தில் கொண்டு மே 10-ம் தேதி வரை மட்டுமே மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. சூரிய ஒளி இல்லாத காலங்களில் மட்டும் மின் தேவையை பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும். எனவே, அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என்றனர்.