சென்னை மற்றும் பெங்களூர் இடையே தினசரி லட்சக்கணக்கான மக்கள் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயணம் செய்து வருகின்றனர். இந்த இரு நகரங்களுக்கிடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் ரூ.15,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

மொத்தம் 262 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த சாலை, பயண நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறைக்கும். மேலும் சரக்கு போக்குவரத்தும் விரைவாகவும் குறைந்த செலவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2022ல் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் 2023 இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டாலும், நிலம் கையகப்படுத்துதல், வனவிலங்கு சரணாலய ஒப்புதல்கள், நிதி சிக்கல்கள் போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
கர்நாடகப் பகுதியில் பணிகள் பெரும்பாலும் முடிந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள பகுதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால், முழுமையான திறப்புக்காக பயணிகள் காத்திருக்கின்றனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது, இந்த எக்ஸ்பிரஸ் வே டிசம்பர் 2025 முதல் மார்ச் 2026க்குள் முழுமையாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெங்களூர் – ஹைதராபாத் மற்றும் பெங்களூர் – புனே இடையேயும் புதிய எக்ஸ்பிரஸ் வே திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.