சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை டெண்டர் விடுத்துள்ளது. கோவளம் கடற்கரையில் மட்டும் நீலக் கொடி சான்றிதழை பெற்றுள்ள நிலையில், மெரினா கடற்கரையும் அதை பெற திட்டமிட்டுள்ளது.
5 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போது நீலக்கொடி கடற்கரையாக கோவளம் கடற்கரை உள்ளது.
தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலை உள்ளிட்ட சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடலோர மேம்பாட்டுத் திட்டம் ரூ.1,675 கோடியில் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையை முற்றிலும் மாற்ற முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருக்கமாக உள்ளன.
தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) அதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரித்துள்ளது. தமிழ்நாடு கடலோர மீட்பு இயக்கம் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ரூ.1,675 கோடி மதிப்பிலான புதிய கடற்கரை மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழக கடலோர பகுதிகள் மேம்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக கடலோரப் பகுதிகளை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு முயற்சியின் கீழ் சில முக்கிய திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையை முற்றிலும் மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 52 கிமீ புதிய கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகள் இப்பகுதியில் கிடைக்கும்.