சென்னை: சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
துணைவேந்தர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகின்றன.
இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை பல்கலையின், 166-வது பட்டமளிப்பு விழா, செப்., 4-வது வாரம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர் வி.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4-வது வாரத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிஎச்டி பட்டதாரிகளுக்கு நேரில் சென்று பட்டம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை பல்கலைக்கழக தகவல் மையத்தில் ரூ.25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்., 14-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.