சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை பரப்பில் இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட ஓடுதளங்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன. இதனால் அவற்றை மேம்படுத்தி விமான நிலையமாக மாற்ற வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர். கல்வி, வேலை, வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தனி விமான நிலையம் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மத்திய அரசு 2025 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, வணிகக் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு, அருகில் மதுரை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்கள் உள்ளதால், செட்டிநாட்டில் புதிய விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளது. அதற்குப் பதிலாக அங்கு விமானிகள் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, பயிற்சி மையம் மட்டுமே அமைக்கப்படுவது வேதனையானது என அவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்ட மக்களின் கனவு திட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.