புதுச்சேரி: காவல்துறையில் அடுத்த ஆண்டு 350 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 326 ஊர்க்காவல் படையினருக்கு கம்பன் கலையரங்கில் பணி ஆணை வழங்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். டிஜிபி சீனிவாஸ் வரவேற்றார்.
முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊர்க்காவல் படையினருக்கு பணி உத்தரவுகளை வழங்கி பேசியதாவது; புதுச்சேரி மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. புதுச்சேரியில் தொழில் சாலைகள் பெருகினால் மட்டுமே ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. சேதாரப்பட்டு பகுதிக்கு தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொறுப்பேற்ற பின், பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. காவல்துறையில் முதல் ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அடுத்த ஆண்டு 350 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதேபோல், நிர்வாகத் துறையில், எல்.டி.சி., யு.டி.சி., அசிஸ்டென்ட் என, 256 பேருக்கு, விரைவில் தேர்வு நடக்க உள்ளது. அரசு துறை மூலம் மக்கள் செய்ய வேண்டிய பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையில் உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மாணவர்களை போதைக்கு அடிமையாவதிலிருந்து போலீசார் பாதுகாக்க வேண்டும். ஊர்க்காவல் படையினர் காவல் துறையுடன் ஒத்துழைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் நண்பர்களாக பணியாற்ற வேண்டும்’, என்றார். இந்நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., டி.ஜே.ஜி., பிரஜேந்திரகுமார் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.