சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2 நாள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு முதலீட்டாளர்களுடன் சிறிய அளவிலான சந்திப்புகளும் நடத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதுதவிர துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்று அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இதனால் பல முதலீட்டாளர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணம் ஜூலை மாதம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தல் பணிகள், பல்வேறு திட்டங்களின் துவக்க விழாக்கள், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா போன்ற காரணங்களால் முதல்வரின் வருகை ஆகஸ்ட் 3வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அதன்படி, முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 15 நாட்கள் பயணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.அவர் 15 நாட்கள் வரை அங்கேயே தங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர், தொழில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகளும் அமெரிக்கா செல்கின்றனர்.