சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை நடைபயிற்சியின் போது தலைசுற்றல் ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், இதய துடிப்பு சீரற்றதே காரணம் என தெரியவந்த நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் சீர்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜூலை 24 ஆம் தேதி அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனையும், இதய துடிப்பை சீராக்கும் சிகிச்சையும் நடத்தப்பட்டது. இந்த சிகிச்சையை இதய நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு தலைமையிலான குழு மேற்கொண்டது. பரிசோதனையில் வேறு எந்த அதிர்ச்சி தரும் பாதிப்புகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஓய்வில் இருந்தாலும், முதல்வர் தனது அரசியல் மற்றும் நிர்வாக பணிகளை தொடர்ந்துவருகிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களிடம் கிடைத்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவும் வழங்கினார்.
முதல்வரின் உடல் நலத்தைக் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் நல்லாசிகள் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மருத்துவமனையில் இருந்தபடியே பணிபுரியும் தலைவர், நமது முதல்வர் தான். அவர் இன்னும் இரண்டு நாட்களில் வழக்கமான பணிக்குத் திரும்புவார்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.