சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் இன்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதம் எழுந்தது. இதன் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான விளக்கமளித்தார். கரூர் விஜய் பிரசார கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன் எந்த ஆம்புலன்ஸும் அங்கு வரவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சட்டசபையில் அதிமுக இதை மீண்டும் எடுத்துக்காட்டி விவாதிக்க கோரிக்கை வைத்தது. அதிமுகவினர் பேசுவதற்கு முன்பே முதல்வர் விளக்கம் அளித்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவை வெளிநடப்பை மேற்கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், “கரூர் விஜய் கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தவெக பொதுச்செயலாளர் மதியம் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தார். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன் எந்த ஆம்புலன்ஸும் அங்கு வரவில்லை. மீட்பு பணிகள் நடந்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதும் தவெகவினர் தான். அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது” என்றார்.
அவரது விளக்கத்தில், ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்து சேதம் செய்ததாகவும், இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார். “கரூர் துயரச் சம்பவத்தை அறிந்ததும் நான் உடனே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன். அரசின் முழு இயந்திரமும் மக்களுக்கு துணையாக இருந்தது,” என ஸ்டாலின் கூறினார். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியதுடன், ஆம்புலன்ஸ் விவகாரத்தில் புதிய தெளிவு கிடைத்துள்ளது.