சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு முருகானந்தம் அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது:- மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். குடியிருப்போர் நல சங்கங்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
சென்னையில், நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதிய பணிகளுக்காக ரோடுகளை தோண்டக்கூடாது.
சாலைகளில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து மூட வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பருவமழை தொடங்கும் முன் தாழ்வான பகுதிகளில் பேரிடர் மீட்பு கருவிகள், வாகனங்கள், தண்ணீர் பம்புகள், படகுகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழை தொடங்கும் முன், மாநிலத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை நிறுத்த வேண்டும்.
பகுதி வாரியாக வானிலை தகவல்களை பொதுமக்களுக்கு புரியும் வகையில் வழங்க வேண்டும்.