சென்னை: இயேசு கிறிஸ்து மனிதனாக பூமியில் பிறந்த நாளை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
தேவாலயங்கள் மற்றும் தேவாலய வளாகங்களில் இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் வண்ண நட்சத்திரங்கள் ஜொலித்தன. நேற்று இரவு 11.30 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசுவாமி தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும், ஆராதனைகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிறிஸ்துமஸ் பண்டிகை பாதுகாப்பின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள சுமார் 350 தேவாலயங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பணிக்கு உதவ, ஊர்க்காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.