வடலூர்: ஏசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வடலூரில் திரு இருதய ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.
இதில், பார்வதிபுரம், காட்டுக்கொல்லை, ஆபத்தநாரணபுரம், தென்குத்து, மருவாய், கருங்குழி, கொளக்குடி, கல்குணம், பெத்தநாயக்கன் குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர். இதையொட்டி, ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கோயிலில் பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டது.

செக்ரட் ஹார்ட் தேவாலயத்தில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியது. இதையடுத்து தேவாலய வளாகத்தில் அலங்கார கூடாரம், பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. மேலும், இதனை முன்னிட்டு நேற்று இரவு தந்தை சூசைராஜ், உதவி தந்தைகள் ராஜா சேசுராஜ், தந்தை அகஸ்டின் ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஏசு கிறிஸ்து பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆராரோ அரிராரோ என்ற பாடலுடன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட குடிசையில் குழந்தை ஏசு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தேவாலயத்தின் பேரிஷ் கவுன்சில்கள், இளைஞர் குழுக்கள், மகளிர் குழுக்கள், லெஜியன் ஆஃப் மேரி, வின்சென்ட் டி பால் சொசைட்டி, மறைமாவட்ட கேடட்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் தன்னார்வலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.