சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் 393.71 கோடி கட்டப்பட்டு திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லை. இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில் வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்த கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது. இந்த ரயில் நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இப்பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பணி நிறைவு பெறவில்லை. இதனிடையே, இந்த ரயில் நிலையத்தின் தாழ்வான பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளதால், ரயில் நிலையம் கட்டுவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 நடைமேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, பயணச்சீட்டு அலுவலகம், வாகன நிறுத்துமிடம், சிசிடிவி, கேமராக்கள், நடைபாலம், போக்குவரத்து விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, ஒரு பிளாட்பாரத்தில் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில் கூடுதலாக மழைநீர் வடிகால் அமைக்க தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், இந்த ரயில் நிலையம் கட்டுவதில் மேலும் தாமதம் ஏற்படும். வரும் ஆகஸ்ட் மாதம் இப்பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.