சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணிகளை தனியார்மயமாக்கியதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுத்தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கடுமையாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் போராட்டக் களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தார். அவர் பேசியதில், துப்புரவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே தனியார்மய கொள்கையை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். தமிழகத்திலும் பல துறைகளில் ஒப்பந்தப்பணி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது ஏற்க முடியாதது என்றும், தொழிற்சங்கங்களுடன் இணைந்து தீர்வு காண முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.
சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடிய பிறகு தான் தீர்வு கிடைத்தது என குறிப்பிட்டார். துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைக்கும் அதேபோல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சொல்லப்பட்டவற்றை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறினார்.
தற்போது போராடும் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஆக்கபூர்வமாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார். தொழிற்சங்கங்களின் ஆலோசனையுடன் அமைச்சரிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். போராட்டம் நீடித்தால் அரசியல், சமூக ரீதியான ஆதரவு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.