சென்னை: அண்ணாநகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நவீனப்படுத்தப்பட்ட அமுதம் மக்கள் அங்காடி மற்றும் அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாய விலைக்கடை கட்டடங்களை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-
மானிய கோரிக்கையில், 100 அமுதம் கடைகளை துவக்குவோம் என கூறினோம். அதன்படி அண்ணாநகரில் மேம்படுத்தப்பட்ட புதிய கடையை திறந்துள்ளோம். ஏற்கனவே கோபாலபுரத்தில் வைக்கப்பட்ட அமுதம் கடையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விரைவில் கொளத்தூர் மற்றும் காஞ்சிபுரத்தில் அமுதம் கடைகளை திறக்க உள்ளோம். அமுதம் கடையில் இருந்து வீடு வீடாக அமுதத்தை கொண்டு செல்ல வேண்டும் என தயாநிதி மாறன் எம்.பி. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்போம்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
மற்ற கடைகளை விட அமுதம் கடையில் விலை குறைவு. லாப நோக்கமின்றி விலையைக் கட்டுப்படுத்த அமுதம் கடைகள் திறக்கப்படுகின்றன. 100 கடைகள் தவிர, பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து மேலும் கடைகள் திறக்கப்படும்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை கோரி 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவை பரிசீலித்து குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.