போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் படுகை பகுதிகளான போச்சம்பள்ளி, சந்தூர், அரசம்பட்டி, பாரூர், அகரம், பண்ணந்தூர், மருதேரி, மஞ்மேடு, புலியூர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட நர்சரி தோட்டங்கள் உள்ளன.
இங்கு ஜம்பு, நாவல், காட்டு நெல்லி, வீரிய ஓட்டுரக புளியஞ்செடி, சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் மரக்கன்றுகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தென்னை மரங்களும் இப்பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதற்காக 150-க்கும் மேற்பட்ட தென்னை நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. தென்னை கன்றுகள் தரத்திற்கு ஏற்ப ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து நேரடியாக போச்சம்பள்ளி தாலுகா பகுதிக்கு வந்து தென்னை மரக்கன்றுகளை வாங்கி லாரிகள், டெம்போக்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடி தென்னை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், அகரம், மஞ்சமேடு போன்ற பகுதிகளில் தேங்காய் தரம் மற்றும் அதிக மகசூல் கிடைப்பதால், அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கொட்டையான தென்னை மரக்கன்றுகள் முழுவதுமாக கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களிடையே தென்னை சாகுபடியில் ஆர்வம் குறைந்துள்ளது.
இதனால், போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள நர்சரிகளில் விற்பனை சரிந்துள்ளது. வாங்க ஆள் இல்லாததால், நாளடைவில் இருந்த கன்றுகள் ஆள் உயரத்துக்கு வளர்ந்து, மரங்கள் முதிர்ச்சி அடைந்தன.
இந்த தென்னை மரக்கன்றுகளால் எந்த பயனும் இல்லாததால் தற்போது தென்னை மரக்கன்றுகளை முற்றிலும் அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை ஆராய்ச்சியாளர் புலியூர் கென்னடி கூறுகையில், ‘போச்சம்பள்ளி, அரசம்பட்டி பகுதியில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தென்னை மரக்கன்றுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விளைவித்த கன்றுகளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்தது. தென்னை மரக்கன்றுகளை பொறுத்த வரையில், 2 அடி முதல் 3 அடி உயரம் இருக்கும் போது, நடவு செய்ய வாங்கப்படுவது வழக்கம்.
தற்போது 7 அடியில் இருந்து 10 அடியாக வளர்ந்து விற்பனை செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றார். சில மாதங்களுக்கு முன், தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து தேங்காய் விலை சரிந்தது.
போதிய விலை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் தேங்காயை தேங்காய் என விற்பனை செய்தனர். ஆனால், தற்போது தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதால் தேங்காய் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த காலங்களில் ரூ.7-க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.15 முதல் ரூ.17 வரை விற்கப்படுகிறது.குறிப்பாக போச்சம்பள்ளி தாலுகாவில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தேங்காய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.