தஞ்சாவூர்: தஞ்சையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண நிலையை விட பெரிய அளவில் வீக்கமாக இருந்தது. இதை கவனித்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஏன் உங்கள் வயிறு இவ்வளவு பெரியதாக வீங்கி உள்ளது என்று கேட்டார். அதற்கு மகா அபிலேஷ் பேகத்துடன் வந்த உறவினர் ஒருவர் சின்ன வயதில் சாம்பல் அதிகம் தின்றதால் வயிறு வீங்கி உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை உள்ளது என தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உடனடியாக மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனிடம் விஷயத்தை எடுத்து கூறி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடனிருந்து கவனிக்க சமூக நல பணியாளர்களையும் கலெக்டர் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அந்த பெண்ணின் வயிற்றில் பெரிய அளவிலாக கட்டி இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் அறிவுரைப்படி புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மாரிமுத்து, பாரதிராஜா, முனியசாமி, மயக்கவியல் மருத்துவர் உதயணன் தலைமையிலான குழு கடினமான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து 30 கிலோ கட்டியை மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அந்தப் பெண் நலமுடன் உள்ளார்.
இந்நிலையில் இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றிலிருந்து 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மருத்துவக்குழுவினரை பாராட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் வந்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் வரவேற்று பேசுகையில், பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட கட்டி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு எதனால் கட்டி உருவானது என தெரியவரும். தமிழ்நாட்டில் முதல்முறையாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான் 30 கிலோ கட்டி அகற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். கலெக்டரின் மனிதநேயத்தால் தற்போது இந்த பெண் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ஆகியோர் டாக்டர்கள், சமூக நலப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டினர். இதையடுத்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது:-
பெண்ணின் வயிற்றிலிருந்து கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், செவிலியர்கள், உடன் நின்று கவனித்த சமூக நலப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டுகிறேன். மேலும் அவர் விண்ணப்பித்த உதவி தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.