சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உயர்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2025–26ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 16ஆம் தேதி தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன்னதாகவே திட்டமிட உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இறுதி தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிவடைந்து, அடுத்த நாள் முதல் கோடை விடுமுறை துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்காக மே 30ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.