சென்னை: மதிமுக அரசியல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நீண்டகால துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றிய மல்லை சத்யாவுக்கும் இடையேயான மோதல் கட்சிக்குள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக மல்லை சத்யா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு பதிலளிக்க அவர் வைகோவுக்கு 14 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “32 ஆண்டுகளாக உழைத்த எங்களை துரோகம் செய்யும் பூர்ஷ்வா அரசியலை நாடே பார்க்கிறது” என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மல்லை சத்யா, வைகோவின் நம்பகமான போர்படைத் தளபதிகளில் ஒருவராக விளங்கினார். நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விலகிய பிறகும், அவர் தொடர்ந்து வைகோவுடன் பயணம் செய்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலுக்கு வந்த பிறகு, கட்சிக்குள் மல்லை சத்யா மற்றும் துரை இடையே மோதல் அதிகரித்தது. இதனால் வைகோ இருவரையும் இணைத்து வைக்க முயன்றாலும் பனிப்போர் தொடர்ந்தது.
இந்த நிலைமை தீவிரமடைந்தபோது, மல்லை சத்யா ‘வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள்’ என்ற போராட்டத்தை நடத்தியது சூழலை மேலும் சிக்கலாக்கியது. அதனைத் தொடர்ந்து வைகோ அவரை நீக்க முடிவு செய்தார். எனினும், ஒரே நாளில் விளக்கம் கேட்டும் தற்காலிக நீக்கம் அறிவித்தும் செயல்பட்டது கட்சிக்குள் ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டதாக மல்லை சத்யா தனது கடிதத்தில் குற்றம்சாட்டினார். மேலும், துரை வைகோவுக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
கடிதத்தின் இறுதியில், “32 ஆண்டுகள் எங்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு எங்களை சக்கையாக எறிய முயல்கிறது உங்கள் பூர்ஷ்வா அரசியல். இதற்கான விலையை நிச்சயம் மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்” எனக் கடும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் மதிமுகவில் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் எனவும், கட்சியின் உள்ளக நிலைமை பெரும் மாற்றத்தைக் காணும் எனவும் அரசியல் வட்டாரங்கள் ஆராய்கின்றன.