புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். நிர்மலா சீதாராமனை சந்தித்து விஜய் வசந்த் அளித்த மனு விவரம்: ஜிஎஸ்டி வரி, வங்கிக் கடன், விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களின் நலன் கருதி சில கோரிக்கைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு மத்திய அரசு பல அத்தியாவசிய பொருட்களின் வரியை குறைக்க வேண்டும். கல்விச் செலவு அதிகரித்து வருவதால், பல ஏழை மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வங்கிகளில் கல்விக் கடன் பெற்று கல்வியைத் தொடர்கின்றனர். ஆனால், இந்த வட்டியுடன் கூடிய கல்விக் கடனை அடைக்க முடியாமல் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் திணறி வருகின்றனர்.
எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பதன் மூலம், மாணவர்களின் கல்விச் செலவு குறையும்.
மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வரியை குறைப்பது அவர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய உதவியாகும். அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து விலைவாசியை அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சிறு மற்றும் குறு தொழில் முனைவோரின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி சேவையை எளிமையாக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.