கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமான பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அஸ்திவாரப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாலம் வர்ணம் பூசும் பணியும் விரைவில் முடிவடையும். கோயம்புத்தூர் அவிநாசி சாலை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதையாக உள்ளது. கோவை விமான நிலையம், டைடல் பார்க், பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அவிநாசி சாலையில் அமைந்துள்ளது.

இந்த ரோடு, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை நகருக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதற்கு தீர்வாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில், 2020ல், அ.தி.மு.க., ஆட்சியில், உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை, 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ. 1,621 கோடியில் தொடங்கப்பட்டது.
இந்த மேம்பாலம் 17.35 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது. கிருஷ்ணம்மாள் கல்லூரி, கிர்ஜி பள்ளி, கேஎம்சிஎச் மருத்துவமனை, பிஎஸ்ஜி கல்லூரி, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்பணியை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், மேம்பாலத்தை நீட்டிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூருக்கு மேலும் 5 கிலோமீட்டர் நீட்டிக்க ரூ.600 கோடி செலவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நீட்டிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, கோல்டுவின்ஸ் வரை உள்ள மேம்பாலம் 85 சதவிகிதம் முடிவடைந்து, இன்னும் சில பணிகள் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “”உப்பிலிபாளையம் பகுதியில் பிரதான பிளாட்பாரம் கட்டும் பணி முடிந்துள்ளது. கோல்ட்வின்ஸ் பகுதியில் பிளாட்பாரம் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. அதேபோல், சித்ரா, ஹாப்ஸ், அண்ணா சிலை, நவ இந்தியா பகுதிகளிலும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஜூன் 2025க்குள் முடிக்கப்படும்” என்றார். மேலும், தூண்களின் வெளிப்புறத்தில் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவிநாசி ரோடு மேம்பாலத்தின் புதிய நிறத்தை கோவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.இந்த மேம்பாலம் நீலம் மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்படுவதால். இந்த மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.