சென்னை: சென்னை மெரினா வளைவு சாலை பகுதியில் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாமல், துர்நாற்றம் வீசுவதாகவும், சாலையை ஆக்கிரமிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைகளை முறைப்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, நொச்சிக்குப்பம் பகுதியில், அப்பகுதி மீன் விற்பனையாளர்களுக்காக, மாநகராட்சி சார்பில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 366 கடைகளுடன் கூடிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது.
இந்த நவீன மீன் சந்தையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 60 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளன.
இந்த மீன் சந்தையை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இதனால், மாநகராட்சி சார்பில் கடைக்காரர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:-
சாலையோரம் செயல்படும் மீன் கடைகள் தொடர்ந்து புதிய மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கடைகளும் சந்தைக்கு மாற்றப்படும்.
மெரினா வளைவு சாலை, சாலையோர வியாபாரம் செய்ய தடை மண்டலமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.