குன்னூர்: குன்னூரில் அபாயகரமான மின்கம்பம், மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோத்தகிரி பகுதியில் மின்கம்பியில் அறுந்து விழுந்த அரசு பஸ் டிரைவர் பலியான நிலையில், குன்னூரில் அபாயகரமான மின்கம்பம், மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மின்கம்பியில் பேருந்து ஏறியதில் அரசு பேருந்து ஓட்டுநர் பிரதாப் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும். மின்கம்பங்களில் சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் அடர்ந்த கொடிகளை அகற்ற மின் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக குன்னூரில் மின்கம்பிகள், மின்கம்பங்கள் சாய்ந்து அபாயகரமானதாக கருதப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சாலையோரம் உள்ள அபாயகரமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சாலையோரம் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.