சென்னை: சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பெண்கள் மீதான இந்த பாலியல் வன்கொடுமை முற்றிலும் தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை தேவை. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வு தேவை என்று சமூக நல ஆர்வலர் அர்பிதா தெரிவித்துள்ளர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியிட்ட தேசிய குற்றப்பதிவு அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 31,516 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து ஆண்டுகளும் வெளியிடப்படும் இந்த தேசிய குற்றப்பதிவு அறிக்கை, கடந்த 2023ம் ஆண்டு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான குற்ற விகிதமும் (Crime Rate Per Lakh Population) தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள மாநிலத்தில், எத்தனை பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என்பதற்கான புள்ளி விவரமும் கூறப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கும் மாநிலம் அசாம். அசாமில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1,113 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு குற்ற விகித சதவீதம் 6.4 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 9ஆவது இடத்தில் இருப்பது டெல்லி. டெல்லியில் ஒரு ஆண்டில் மட்டும் 1,212 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்ற விகித சதவீதம் 12.3 ஆக உள்ளது. சத்தீஸ்கர் இந்த பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. சத்தீஸ்கரில் 2022ஆம் ஆண்டு மட்டும், 1,246 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் குற்ற விகித சதவீதம் 8.3 ஆக உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் இந்த பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜார்கண்டில் மட்டும் 1,298 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் குற்ற விகித சதவீதம் 6.8 ஆக உள்ளது. உத்தர பிரதேசம் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. உ.பி.யில் கடந்த 2022 ஆண்டு மட்டும் 3,690 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்ற விகித சதவீதம் உ.பி.யில் 3.3 ஆக உள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலம். இந்த மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும், 5,399 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இப்படி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்க போதைப் பொருட்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது தலையாய கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.