சென்னை: தமிழக சுகாதாரத்துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மருத்துவ காலியிடங்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 24,000 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதில் 4,585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அதன்பின், 89 கூடுதல் காலிப் பணியிடங்கள் உட்பட, 2642 டாக்டர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது. இந்நிலையில், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மருத்துவ காலியிடங்களுக்கான கவுன்சிலிங் எழும்பூரில் இன்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங் நாளை மறுநாள் வரை நடைபெறும். கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள் 15 நாட்களுக்குள் அந்தந்த மருத்துவமனைகளில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் கிடைக்காமல், இறுதியில் காலி இடங்களில் நியமிக்கப்படுவர் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களுக்கான பணி நியமனம், வரும் 26-ம் தேதி, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணையை வெளியிடுகிறார்.