சென்னை: தியாகிக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்காத நிலையில் தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.