மதுரை அருகே விராதனூரில் ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற முழக்கத்துடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தமிழகத்தில் முதன்முறையாக ஆடு, மாடுகளுக்காக தனியான மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான நாட்டு இன மாடுகள் பங்கேற்றன. மாநாட்டின் மேடையில் இருந்து, மாடுகளுக்கு முன்பாகவே சீமான் உரையாற்றினார்.

இந்த மாநாட்டின் மூலம், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டிய அவசியம், வனப்பகுதிகளில் ஆடு மாடுகளுக்கு அனுமதி தேவை, கனிமவள கொள்ளை மற்றும் மணல் கடத்தலால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சீமான் வலியுறுத்தினார். மாடுகளின் கழிவுகள் நிலத்திற்கு உரமாக பயன்படுகிறது என்றும், நவீன விவசாய முறைகள் திட்டமிட்ட நாட்டு மாடுகளை அழிக்க நோக்கமிட்டு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாடுகள் கொல்லப்பட்டதால் இந்தியா பால் உற்பத்தியில் பின்தங்கி இருக்கிறது என்றும், மாடுகளின்றி பால், இறைச்சி எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். மேய்ச்சல் நிலங்கள் மறைந்து வருவதால், ஆடு மாடுகள் ஒரு வாய் தண்ணீர் குடிக்க முடியாமல் தவிக்கின்றன என்றும் வேதனை தெரிவித்தார்.
வாயில்லா ஜீவன்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி தான் என்றும், ஒருநாள் இந்த போராட்டத்தின் அருமை அனைவருக்கும் புரியும் என உறுதியாக கூறினார்.