சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை என்பதால், 10-ம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்ல பெரும்பாலானோர் திட்டமிட்டிருந்ததால், நேற்று துணிக்கடைகளுக்கு சென்று புது துணி வாங்க திட்டமிட்டனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோட்டில் உள்ள ஏராளமான துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பழைய வண்ணாரப்பேட்டை செல்லும் சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
தியாகராய நகரில் உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் நடமாட முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. அங்குள்ள பிரபல ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஏராளமானோர் ஆடைகள், நகைகளை வாங்கிச் சென்றனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை முதலே இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.