சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேக பிரியா, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் முதல் தகவல் அறிக்கை கசிவு வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விரைவில் விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த இரு வாரங்களாக இவ்விரு வழக்குகளையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த மாநில சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி, அந்த குழுவில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அணியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும், கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிட்டதாலும் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி ராஜினாமா செய்தது குறித்து தமிழக காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.