மதுரை: மதுரை விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏசி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மதுரை விமான நிலைய வளாகத்தில் விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் விதமாக புதிதாக கண் காணிப்புக் (வாட்ச் – டவர்) கோபுரம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் கீழ்தளப் பகுதியில் ஏசி இயந்திரம் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் இன்று நடந்தன.
அப்போது, அந்தப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது மின் கசிவால் ஏற்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தால் ஏசி இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “பணியில் ஈடுபட்டவர்கள் சிகரெட் பிடித்திருக்கிறார்கள். அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப் படுகிறது.
இந்த தீ விபத்தால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. புதிதாக வாங்கப்பட்ட ஏசி இயந்திரம் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தன” என்றனர்.