தஞ்சாவூர்: மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
01.12.2019 முதல் 16.05.2023 வரை மின்வாரிய பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திட்ட தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். திட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்றார். மண்டல செயலாளர் எஸ்.ராஜாராமன் துவக்கவுரையாற்றினார். திட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், ஒரத்தநாடு கோட்டச் செயலாளர் எஸ்.ரவி, தஞ்சாவூர் கோட்டச் செயலாளர் என்.அறிவழகன், பட்டுக்கோட்டை கோட்ட செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் டி. மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செயலாளர் டி.கோவிந்தராஜூ நிறைவுரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் தஞ்சை நகர கோட்டச் செயலாளர் ஆர்.அரிகேசவன் நன்றி கூறினார்.