சென்னை: இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொது உயிர் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது வெளியாகும் நச்சு வாயுவால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு கேடு ஏற்படுவதாகக் கூறி, மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொது உயிர் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து, அங்கு கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என, தினகரன் வலியுறுத்தியுள்ளார்.