திருக்கழுக்குன்றம் : மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நோய் பரவாமல் இருக்க செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதியாக கருதப்படும் மேலக்கோட்டையூர் பகுதியில், சென்னை உட்பட பல்வேறு நகர்ப்புறங்களை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் இங்கு குடியேறி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு போலீஸ் குடியிருப்பும் இங்கு கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, காவலர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீட்டு கழிவுகளை, அருகில் உள்ள பெரிய ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், கடந்த சில நாட்களாக ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் தற்போது கூடுதல் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதிக்கு செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மேலும் இந்த ஏரிக்கு அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணற்று நீரை ஊராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துவதால் வாந்தி, பேதி ஏற்படுவதுடன், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதுடன், குடிநீர் கிணறும் மாசுபடுகிறது.
எனவே இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.