சென்னை: மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விசிக உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் சென்னையில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் மு.பாபு, ஆளூர் ஷா நவாஸ், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எழில் கரோலின், ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: போதைப்பொருள் மற்றும் மது ஒழிப்புக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பிஎம்எஸ்ஆர் பள்ளித் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் என்று மிரட்டல் அரசியல் செய்யும் பாஜக அரசுக்கு கடும் கண்டனம். உடனடியாக நிதி வழங்க வேண்டும்.
முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் மூலம் தமிழக அரசின் அணுகுமுறை நழுவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சாதிக் கொலைகளைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சாதிகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும். எஸ்சி பிரிவில் உள்ள உள் இடஒதுக்கீடு பரிந்துரையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், போரின் போது காணாமல் போன தமிழர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.