சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளை அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இது ஒரு பொது விடுமுறை. அதன்பின் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால், இடையில் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.
எனவே அக்டோபர் 31, நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை. விடுமுறை காலம் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக இம்மாதம் கடைசி வாரத்தில் புதன் அல்லது வியாழன் அன்று சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரயில்களுக்கான முன்பதிவுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டன. இதனால், ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்கள், பஸ்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்துவதால், அரசு பஸ்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்களுக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 72,000 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து 29-ம் தேதி 21,000 பேரும், 30-ம் தேதி 23,500 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ஆனால் சென்னையில் கனமழை காரணமாக ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, வரும் 19-ம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், குறிப்பாக சென்னையில் இருந்து எத்தனை பஸ்கள் இயக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எந்தெந்த பகுதிகளில் இருந்து எந்தெந்த நகரங்களுக்கு பஸ்களை இயக்கலாம், பயணிகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் ஐந்தரை லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு 10,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவதற்காக அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.