சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகள் நிரம்பியதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஜூலை 30ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 73,330 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் துணை மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடியும், 16 கண் மதகுகள் மூலம் வினாடிக்கு 48,500 கன அடியும் என மொத்தம் 70,000 கன அடி வீதம் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மதியம் 60,273 கன அடியாகவும், மாலையில் 50 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. இதையடுத்து அணையின் சுரங்க மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 21,500 கன அடி வீதம், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 28,500 கன அடி வீதம் மொத்தம் 50,000 கன அடி வீதம் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.02 அடியாகவும், நீர் இருப்பு 93.50 டிஎம்சியாகவும் இருந்தது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 31 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக பொங்கி வழிந்த நீரின் வேகம் நேற்று மாலையுடன் சற்று தணிந்து காணப்பட்டது.