கோவை: சட்ட மேதை அம்பேத்கருக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாக கூறி, திமுக இன்று (டிச.19) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது. அதன் படி, கோவை மாநகர் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், மேட்டுப்பாளையம் சாலை அருகே பாரதிபார்க் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், போத்தனூர் ரயில்நிலையம் அருகே ஏற்றப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்தி, அமித்ஷாவை பதவி விலக்க வேண்டும் என்பதாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.