சென்னை: அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்டும், அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து, ஜூன் 18ஆம் தேதி மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு முதன்முதலில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய அரசு முதற்கட்டங்களில் அகழாய்வுகளை மேற்கொண்ட பிறகு, பணியை பாதியில் கைவிட்டது. அதன் பின்னர் தமிழக அரசு தொடர்ந்து ஒன்பது கட்டங்களாக அகழாய்வு செய்து, 5000க்கும் மேற்பட்ட பழமையான பொருட்களை கண்டெடுத்துள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தமிழர்கள் மிகமுந்தைய நாகரிகத்தை உடையவர்கள் என்பதையும் நிரூபிக்கிறது. ஆனால் மத்திய அரசு முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மறுக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கும் போக்கின் வெளிப்பாடு என கடுமையாக விமர்சித்துள்ளார். கீழடி குறித்து அறிவியல் ஆதாரங்கள் குறைவாக உள்ளதாக கூறும் மத்திய அரசு, உண்மையை மறைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், அறிவியல் ஆதாரங்கள் முழுமையாக இல்லை என்பதால்தான் அறிக்கை வெளியாகவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்பதும் அவரது கருத்தாகும்.
இந்நிலையில், திமுக மாணவர் அணியின் மாநில செயலாளர் ராஜீவ்காந்தி, “கீழடி என்ற பெயரே பாஜகவுக்கு பொறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. அகழாய்வை நடத்தும் அதிகாரிகள் பாஜகவுக்குத் சாதகமாக சொல்லவில்லை என்பதற்காக துன்புறுத்தப்பட்டனர். பாஜகவுடன் கை கோர்த்த எடப்பாடி அரசு கீழடி பணியை மூடி வைத்தது. தற்போது திமுக அரசு கீழடிக்கு உயிர் கொடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இந்தப் போராட்டத்தில் மாணவர் அணியின் அனைத்து நிலை நிர்வாகிகளும், கல்லூரி மாணவர் அமைப்புகளும் தோழர்களுடன் திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.