சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகே உள்ள விருகம்பாக்கம் கால்வாய் முகத்துவாரம், கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கனமழையின் போது, விருகம்பாக்கம் கால்வாய் வழியாக, தெருக்களில் தண்ணீர் தேங்காமல், தண்ணீர் வெளியேற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து அண்ணாநகர் ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து கூவம் ஆற்றுக்கு செல்லும் இணைப்பு கால்வாய் முகத்துவாரத்தின் முன்புறம் அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். கடந்த மாதம் ஓட்டேரி நல்லா கால்வாயை துணை முதல்வர் ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து ஓட்டேரி நல்லா கால்வாயில் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் கன்னிகாபுரம் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் வி.சிவ கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி. வினய், எம்எல்ஏ ஏ.எம்.வி. பிரபாகரராஜா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.