தஞ்சாவூர்: பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூபாய் 3 கோடியே 12 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் சனிக்கிழமை அன்று துவக்கி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொக்கன்விடுதி-உப்புவிடுதி இணைப்புச் சாலை ரூ.86.14 லட்சம் மதிப்பீட்டிலும், இடையாத்தி ஊராட்சியில் வேலாம்பட்டி-வெங்கரை இணைப்புச் சாலை ரூ.95.86 லட்சம் மதிப்பீட்டிலும், புனல்வாசல் ஊராட்சியில் ராமகிருஷ்ணாபுரம்-கீழப்புனவாசல் சாலை ரூ.69.30 லட்சம் மதிப்பீட்டிலும், குறிச்சி ஊராட்சியில் குறிச்சி – எண்ணாணிவயல் சாலை 46.79 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது..
இதற்கான பணிகளை சனிக்கிழமையன்று தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தனர்
இதேபோல், குறிச்சி ஊராட்சியில், ரூ.14.59 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
நிகழ்ச்சிகளில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.