கோவை : தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், காவல்துறை தொடர்பான புகார்கள் மீது மண்டல வாரியாகக் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.
காவல் துறையினரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், “கோவை நகரம் மற்றும் மாவட்டம், திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறைகளின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே இடமாறுதல் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், தற்போது மனு கொடுக்கும் காவல்துறையினரின் மனுக்கள் பணி மூப்பு அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் உங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் நல்ல பணி கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்றார்.
இதையடுத்து, பணியில் குளறுபடியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, போலீசார் அளித்த மனுக்களை, டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் கோவை மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர்.